செவ்வாய், 21 செப்டம்பர், 2021

கட்டிய மனைவியை வைத்து குடும்பம் நடத்த வக்கற்றவனால் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியாது என்ற ஆனபெல் சேதுபதி படத்தின் வசனம் நாட்டு நடப்போடு ஒத்துப் போகிறதா? இந்தக் கேள்விக்கு என்னுடைய விடை.

முற்றிலும் தவறான சிந்தனை.

கோடிக்கணக்கான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவன் அல்லது தலைவி ஒரு நபரால் நிராகரிக்கப்பட்டால் அல்லது புறக்கணிக்கப்பட்டால் அது அந்த இன்னொரு நபரின் தவறாக ஏன் இருக்கக்கூடாது?

அல்லது இவரே அந்த நபரை நிராகரித்தார் புறக்கணித்தார் என்றால் அது ஏன் அந்த இன்னொரு நபரின் குறையாக இருக்கக்கூடாது?

அப்படியே இந்த தலைவன் தனது சொந்த வாழ்க்கையில் தவறு செய்திருந்தாலோ தோற்றுப் போயிருந்தாலோ அதற்காக அவனது பிற வெற்றிகளை சாதனைகளைப் புறக்கணிக்க முடியுமா?

திருமணமாகி வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தும் அத்தனைபேரும் நாட்டின் தலைவராகி விட முடியுமா?

வீட்டை சிறப்பாக நிர்வகிக்கும் எல்லோரும் நாட்டை நிர்வகித்து விட முடியுமா?

சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு மீடியம்.

அதனை சரியான படி மக்களுக்குப் பயன்படும் விதமாக உபயோகிக்க வேண்டும்.

இதுபோன்ற தவறான சிந்தனைகளை வளரும் சமுதாயத்தினரிடையே விதைக்கக் கூடாது.

எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்கியவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் என்று சொல்வது போல் இந்த வெளிப்பாடு இருக்கிறது. அவர்கள் இழந்ததை எள்ளி நகையாடுவது கூடாது. அது மனிதாபிமான சிந்தனை ஆகாது.(அவர் அனுபவித்த தனிமையை துயரத்தை நாம் அனுபவித்தோமா?)

மேலும் இழப்பு என்று அவர் கருதினால் அது இழப்பு.மிகப்பெரிய தவறான வாழ்க்கையிலிருந்து விலகி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நினைத்தால் அது நிம்மதி

எனவே இது போன்ற பிற்போக்குக் கருத்துக்களை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

ஒரு மனிதனை, ஒரு மாநிலத் தலைவனை, ஒரு நாட்டின் தலைவனை அவனுடைய சொந்த வாழ்க்கையை வைத்து எடை போடுவது என்பது தவறான அணுகுமுறை.

முந்தைய மூன்று தலைமுறைகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு மனைவிகள் இருந்திருப்பார்கள்.

அன்று அது சரியான வாழ்க்கை நெறியாகக் கருதப்பட்டது. அதுவே இன்று பெண்களுக்கு எதிரான ஒன்றாகக் கருதி சட்டம் இயற்றப்பட்டு தவிர்க்கப்பட்டு விட்டது.

திருமணம் என்பது சொந்த வாழ்க்கை.அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. அதை விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை. அடுத்தவருடைய தனி உரிமை (Privacy)என்று ஒன்று இருக்கிறது அல்லவா.

இன்று நாம் எல்லோரும் நன்றாக குடும்ப வாழ்க்கை வாழ்கிறோம் என்பதற்காக அது ஒன்று மட்டுமே சரியான பாதை என்று சொல்ல முடியாது. பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ தானாகத் தேர்ந்தெடுத்த திருமணமோ எதுவும் தவறாகலாம். இன்று நாம் வாழும் வெற்றியான வாழ்க்கை நாளை நம் பிள்ளைகளுக்கு அமையுமா என்று கூறமுடியாது.

எந்த ஒரு தவறும் நம் குடும்பத்தில் நிகழாதவரை அது நகைப்புக்குரியதாகத் தான் இருக்கும்.

அவனுக்கு பிள்ளைகள் இல்லை அவன் ஆண்மகனே இல்லை இவனுக்கு வாரிசுகள் அதிகம் குடும்பங்கள் இருக்கின்றன … இதெல்லாம் என்ன தவறான வார்த்தைகள்.

இன்று நம்மோடு இருக்கும் குடும்பத்தினர் நாளை நம்மை விட்டுப் பிரிய மாட்டார்கள் என்பதை யாராவது இந்த நிலையற்ற, நிரந்தரமற்ற உலகத்தில் நிச்சயமாகச் சொல்ல முடியுமா?

விவேகானந்தரும், புத்தரும் நடமாடிய புண்ணிய பூமியில் வசிக்கிறோம்.

வாஜ்பாய், அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் நம் நாட்டை வழி நடத்தி இருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா,(சொந்தமாக வாரிசு இல்லை தான்) காமராஜர் போன்றவர்கள் வாழ்ந்த பூமி நம் தமிழ்நாடு.

இவர் போல யார் என்று உலகம் கூறவில்லையா? மாபெரும் சபைகளில் போற்றப்பட வில்லையா?

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சொந்த வாழ்க்கை குறித்த அவதூறு பேசுவதை படித்த பண்புள்ள இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.

அரசியலில் அவர்கள் செய்யும் தவறுகளை கிழி கிழி என்று கிழிக்கலாம். தவறில்லை. (அதேநேரம் அவர் மக்களுக்கு என்ன செய்திருக்க வேண்டும் என்ன செய்ய கூடும் என்னவெல்லாம் செய்தார் எப்படி நிர்வகித்து இருக்க வேண்டும் என்பதையும் பற்றி சிந்திக்க வேண்டும்)

அதை விடுத்து அவனுக்கு எத்தனை மனைவிகள் இவனுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை அவன் ஏன் மனைவியை பிரிந்தான் அவனுக்குப் பிள்ளைகள் ஏன் இல்லை என்பது போன்ற விமர்சனங்கள் அவரவருடைய தாழ்ந்த சிந்தனைகளையே காட்டுகின்றன. தமிழன் அவ்வாறு தரம் தாழ்ந்து போக கூடாது என்ற அக்கறையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறேன்.

சரியான முறையில் எடுத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம்!

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தங்களது வீட்டிலேயே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற திட்டத்தை தமிழக அரசு இன்று தொடங்கி உள்ளது

நல்லது தான் இப்போதாவது துவங்கப்பட்டது என்ற வரைக்கும் மகிழ்ச்சி.

லாக் டவுன் போட்டு விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றால் முதியவர்களை அழைத்துச் செல்வது என்பது எல்லோருக்கும் சிரமம் தானே? ஆட்டோக்கள் ஓடாது டாக்சி ஓடாது பஸ் ஓடாது என்ற அளவில் இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது.

எப்படி பெரியவர்களை அழைத்துச் சென்று ஊசி போட்டு அழைத்து வருவது என்பது எல்லோருக்குமே ஒரு கேள்விக்குறியானது.

வீட்டிலேயே இருங்கள் என்று முதல்வர் முதல் அத்தனை பேரும் தொலைக்காட்சியில் கூறிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிலேயே எல்லோரும் முடங்கி இருக்கும்போது தமிழ்நாட்டில் யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை என்று அநியாயமாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இன்று கறிகாய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாமே door delivery என்று ஆகிவிட்ட பின்பு தேவையில்லாமல் ஏன் வெளியே செல்ல வேண்டும்?

போக்குவரத்து நெருக்கடி குறையும். Pollution குறையும். நோய்த்தொற்று பரவுதல் குறையும்.

குறைந்தது முதியவர்களையாவது வீட்டிலேயே வைத்து அவர்களுக்கு தேவையான தடுப்பூசியை கொடுப்பதில் நன்மை தானே தவிர எந்த தவறும் இல்லை.

இரத்தப்பரிசோதனை முதல் அனைத்தும் நம் வீட்டிற்கே வந்து செய்திடும் வசதி இருக்கும்போது பெரியவர்களை தேவையில்லாமல் ஒரு ஊசி போடுவதற்காக 30 கிலோமீட்டர் பயணிக்க வைப்பதெல்லாம் சிரமம் என்பது எல்லோரும் அறிந்தது தானே.

இந்தத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிற்கே சென்று தடுப்பூசி கொடுப்பதும் சிறந்ததாக இருக்கும்.

இப்போது தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.

அவர்களையும் தேடிச்சென்று தடுப்பூசி செலுத்துவது இன்னும் சிறந்ததாக இருக்கும்.

நடக்க முடியாத வயோதிகர்கள் வாக்கர் வைத்து நடப்பவர்கள் எல்லோருமே வீட்டில் இருந்தபடியே போட்டுக் கொள்ள முடிந்தால் சிறப்புதான்.

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...