வெள்ளி, 8 அக்டோபர், 2021

இறைவனிடம் கையேந்தினேன்...

எங்கள் குடியிருப்பில் 4 மிகப் பெரிய (3 மே ஃபிளவர் ஒரு வேம்பு) மரங்களை வரும் 6ஆம் தேதி இல் இருந்து ஆரம்பித்த மூன்று நாட்களுக்கு வெட்டி விடப் போகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கு நட்பாகவே எதிர்ப்பு தெரிவித்தேன்.அது கட்டிடத்தின் மீது சாய்ந்து விடும் என்றெல்லாம் கூறினார்கள் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நிறைய இடைவெளி இருக்கிறது.

இன்று சுற்றறிக்கை அனுப்பி கையெழுத்து போடுமாறு கேட்டபோதும் வேண்டாம் கிளைகளை தரித்து விடுங்கள் மரத்தை வெட்ட வேண்டாம் என்று ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டு அனுப்பினேன்.

இருந்தாலும் 2 மணி நேரம் கழித்து வாட்ஸ்அப் குரூப்பில் (அட்மின் மட்டுமே பதி விடுவார் ) அனைவரும் வாகனங்களை வேறு இடத்தில் மாற்றி அந்த மூன்று நாட்கள் நிறுத்திக்கொள்ளுங்கள் மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று அட்மின் அறிவித்துவிட்டார்

மிகுந்த மன உளைச்சல். நான் சொல்வதைக் கேட்பார்கள் கேட்கவில்லை என்ற ஈகோ எல்லாம் இல்லை.

இருபது வருடங்களாக நாங்கள் பார்த்து வந்த மரங்களை வெட்டி வீழ்த்துவது என்பது என்னால் கண் கொண்டு பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.அழகாக வரிசையாக அமைந்த மரங்கள் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆயிரம் ஆயிரம் பறவைகள் கூடுகள் எப்போதும் ஒலிக்கும் பறவையின் குரல்….இனி எங்கள் குடியிருப்பு ஒரு கான்கிரீட் காடு.

கண்கலங்கி கொண்டிருக்கிறேன். தொண்டை அடைக்க..

பிளாட் ஓனர்ஸ் 15 பேர்தான் இருக்கிறோம்.அதில் ஒரு நாலைந்து பேர் மட்டுமே அந்த இடத்தில் வேறு மரம் வைத்துக் கொள்ள வேண்டும் (subject to replacement)என்று கருத்திட்டு இருந்தார்கள். பிறர் கையெழுத்து போட்டுவிட்டார்கள்.

முறையாக அரசு அனுமதி பெறவில்லை. Revenue துறையில் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் என்னால் புகார் எல்லாம் அளிக்க முடியாது. காரணம் இதில் எனக்கு சப்போர்ட் செய்ய ஆள் பலம் இல்லை. மீறி ஏதாவது செய்தால் மிரட்டல் வரலாம். எதுவும் நடக்கலாம். கையறுநிலை

இறைவன் நேரில் வந்தால் எப்படியாவது இந்த செயலை தடுத்துவிடும் என்று கேட்பேன். வேறு வழி இல்லை.


மரங்களுக்கு பின்னால் தெரிவது அடுத்த கட்டிடம். அந்த சுவர் எங்கள் காம்பவுண்ட் சுவர். காருக்கு பக்கத்தில் தெரிவது எங்கள் செக்யூரிட்டி நிற்குமிடம்.



04.10.2021


இன்றைய தேதி மரங்களுக்கு மரணதண்டனை குறிக்கப்பட்ட நாள். ஆறாம் தேதி

நெஞ்சம் துடிதுடிக்க எந்த சத்தம் கேட்டாலும் மரம் வெட்டும் வேலையை துவக்கி விட்டார்களோ என்று பதட்டத்துடனே வேலைகளை செய்துகொண்டிருந்தேன்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இரவில் சில நண்பர்களுடன் நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை என்று பேசிக்கொண்டிருந்தோம்.

மரங்கள் பிழைத்துக் கொண்டன என்று சிரித்தோம்.

நவராத்திரி என்பதால் தசரா பண்டிகையை முன்னிட்டு மரம் வெட்டுவதை ஒத்திப் போட்டு இருப்பார்களோ என்ற சந்தேகமும் இருந்தது.


தேதி 7.

இன்று ஆட்கள் வந்து விட்டார்கள்.

மரங்களின் மரணம் உறுதியாகிவிட்டது.

மரங்களைப் பிளக்க ஆரம்பித்தார்கள்.

நெஞ்சில் படபடப்பு. வெளியே செல்ல வேண்டிய வேலை. ஒருவரின் மேற்பார்வையில் கிளைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

படம் எடுத்தால் அவர் பிரச்சினை செய்யலாம் என்ற சந்தேகத்தில் உயிருக்கு பயந்து அங்கிருந்து வேகமாக சென்று விட்டேன்.



மத்தியானம் திரும்பி வரும்போது வண்டியினுள் அமர்ந்து கொண்டே இந்தப் படத்தை  எடுத்தேன். மனசு கனத்தது

இனி எதுவும் செய்வதற்கில்லை.

நெஞ்சம் படபடத்தது. உடல் வேர்த்தது.

இறைவனிடம் மீண்டும் கையேந்தினேன்.

தவிர்க்கமுடியாததைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை கொடு...

இன்று தேதி 8.

 மரங்கள் முற்றிலுமாக வேரறு க்கப்பட்டன. மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட மரங்களைக் கண்டு கண்ணீர் வடிக்கும் சக்தி கூட எனக்கு இல்லை.

கதவை சாத்திக்கொண்டு வீட்டில் நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறேன்.

மனத்தை எவ்வளவுதான் மாற்றிக் கொள்ள முயன்றாலும் முடியவில்லை என்பதே உண்மை. நண்பர்களிடம் அரட்டை அடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.

மரத்தை வெட்டும் இயந்திரத்தின் விர்...ர்...ர்... 

காதுகளில் அமிலத்தைக் காய்ச்சி ஊற்றியது போல்..

இதயம் வரை சென்று வலியை உணர்த்தியது.

மாடியில் இருந்த பதின் பருவத்தினன் ஒருவன் காட்சிகளைப் படமெடுத்து அழுதுகொண்டே ஸ்டேட்டஸ் போட்டு இருந்தான்.

இன்னும் ஒன்றே ஒன்று மிச்சமிருக்கிறது.


 நொடிகளில் அதுவும் வீழ்த்தப்பட்டது.

இதோ சுமந்து செல்ல வாகனம் வந்துவிட்டது.

மொட்டை மாடியில் இருந்து படம் தான் எடுக்க முடியும்.

மரங்களின் மரண ஊர்வலம் நடந்தேறியது.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...

காற்று மாசு சுற்றுச்சூழல் சீர்கேடு இயற்கையை பாதுகாத்து வருங்கால சந்ததிக்கு வழங்குவது என்பதெல்லாம் ஏட்டளவில் தான் வெறும் வாய்ப்பேச்சு தானா?

நாங்கள் எல்லாம்  தமிழ் வாழ்க கைகட்டி வேடிக்கை பார்த்து பெருமூச்சு விட்டு கண்கலங்கி நிற்க மட்டும் தானா?

இதோ நேற்றும் இன்றும் எடுத்த இரு படங்கள் (7 மற்றும் 8 தேதி) 


அடுத்த கட்டிடத்தில் இருந்து ஆதங்கத்துடன் வேடிக்கை பார்த்தார்கள். காம்பவுண்டுக்கு உள்ளேயிருந்து நாங்களும் கைகட்டி மௌனமாக ...


10.08.2021 

இன்று மயான அமைதி.

இத்தனை நாட்கள் கீச்சிட்ட பறவைகள் அனைத்தும் பறந்தோடி விட்டதால்.

1 கருத்து:

  1. தமிழ் நாட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மண்டையைப் போட்டுட்டாங்களா? எதற்காக இந்த மரங்களை வெட்டினார்கள்? அறிவு ஜீவிகள்

    பதிலளிநீக்கு

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...