மதுரை கோயில் மாநகரம்
கோவை மாநகரம்
மதுரையில் கோயிலும் நாயக்கர் மஹாலும் எந்நாட்டவரையும் ஈர்க்கும்.
கோவையில் அந்த அளவிற்கு பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மதுரையில் விலைவாசி குறைவு
கோவையில் கொள்ளை
மதுரை ஆன்மிக பூமி
கோவையில் ஆன்மீகமோ அரசியலோ அளவோடுதான்.
மதுரையில் சாப்பாடு முக்கியம்.
கோவையில் பணம் முக்கியம்
மதுரையில் வெட்டு குத்து இருக்கும்
கோவையில் சத்தமில்லாமல் வேட்டு வைப்பார்கள்
மதுரையில் சாதி இன ஒற்றுமை அதிகம்
கோவையில் குறைவு( குறிப்பிட்ட ஓரிரு சாதியினர் ஒற்றுமையாக இருப்பார்கள்)
மதுரையில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள். வெளிநாட்டவர்கள் வந்து போவார்கள்.
கோவையில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பல மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
மதுரை தமிழ் ஓரளவு பொருள் விளங்கும். கொங்கு தமிழ் கொஞ்சம் ஏற்ற இறக்கங்களோடு பங்குசந்தை மாதிரி செல்லும்.
மதுரையில் வெட்டி பொழுதுபோக்குவோர் அதிகமாக இருப்பார்கள்
கோவையில் அதுபோல குழுக்களாக நின்று கொண்டு வெட்டி அரட்டை அடிப்பவர்களை அதிகம் பார்க்க முடியாது.
மதுரையில் தானாகவே முன் வந்து உதவி செய்வார்கள் வழி சொல்வார்கள். கூடவே வந்து உதவி செய்வார்கள்.
கோவையில் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது. கேட்டால் கூட உதவி கிடைக்காது. ஏமாற்று வேலை உண்டு. அது மதுரையில் கிடையாது.
மதுரையில் வெப்பம் எரிக்கும்
கோவையின் குளிர்ச்சிக்கு ஈடு இணை இல்லை. (இங்கு பலரும் இருப்பது இதற்காகவே. வேறு எங்கு சென்றாலும் பலரால் இருக்க முடியாது என்பது உண்மை.) அந்த அம்மனே வந்து அழைத்தாலும் இங்குள்ளவர்கள் அங்கு செல்ல மாட்டார்கள். அம்மா நீ இங்கு வந்து விடு என்பார்கள்.
மதுரையில் இருந்து கோவை வந்தவர்கள் இந்த ஊரை விரும்புவார்கள். கோவை மக்கள் மதுரை சென்று வசிப்பது கடினம். காரணம் பருவநிலை.
கோவையில் வெயில் காலம் வந்து விட்டாலே இந்த வெயிலுக்கே (29 டிகிரி) "ச்சூடு ச்சூடு" என்பார்கள், கோவையைப் பூர்விகமாக கொண்டவர்கள்.
மதுரையில் வாழ்க்கை எளிமை
கோவையில் வாழ்க்கை சற்று ஆடம்பரம் ஆனது.
மதுரையை விட கோவையில் தொழில் வணிகம் எல்லாமே அதிக வளர்ச்சி பெற்றுள்ளன.
இயற்கை வளங்களும் அதிகம்.
மதுரையில் மக்களிடையே சற்று பழமைவாதம் இருக்கும். பொதுவாகவே தென் மாவட்டங்களில் காதலுக்கு எதிர்ப்பு கை கால் முறிப்பது வரை போகும். இப்போதெல்லாம் கை விட்டுப் போனால் போனவன் காலை சாதிசனம் முறித்து விடுவார்கள்
கோவையில் சற்று முற்போக்கு வாதம் இருக்கும். வம்புகள் குறைவு. காதலுக்கு மரியாதை இருக்கிறதோ இல்லையோ அடி உதை கிடையாது. அதற்கு பதிலாக போலீஸ் ஸ்டேஷன் போவது அதிகம். வீடியோ எவிடன்ஸ் எல்லாம் காவல்துறையினரிடம் கொடுக்கிறார்கள்.
மதுரையில் திரைப்பட பிரியர்கள் அதிகம். நடிக-நடிகையர்களுக்கு ரசிகர்களும் அதிகம்.அந்த அளவுக்கு சினிமா ஆர்வம் கோவையில் கிடையாது. நடிகர் சிவகுமாரின் குடும்பமே தெருவில் போனாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். சிவகுமாராமா… என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.
மதுரையில் மகாலில் படப்பிடிப்பு நடக்கும். இங்கு ஊட்டியில் தினமும் நடக்கும்.
மதுரையில் உணவு ருசியாக இருக்கும் கோவையில் குடிநீர் சுவையாக இருக்கும் சிறுவாணி நீர் தெவிட்டாத இன்பம்.
மதுரையில் முட்புதர்கள் நிறைந்திருக்கும். குருவிகள் நிறைய குடி இருக்கும்.
கோவையில் இரண்டும் குறைவு.
கோவையில் உள்ள மரங்கள் அதில் உள்ள பறவைகள் இப்போது குறைந்து விட்டாலும் இன்னமும் ரயில் நிலையம் அருகில் திருச்சி ரோட்டில் என்று நிறைய மிச்சம் இருக்கின்றன.ரேஸ்கோர்ஸ் மரங்கள் கொள்ளை அழகு.
குளிர்ச்சிக்கு காரணமும் இவைதான்.
நிறைய மரங்களை வெட்டி சாய்த்து விட்டார்கள். பொள்ளாச்சி சாலையில் இன்று மிச்சமிருப்பது வெட்டிய மரங்களின் அடிப்பகுதி ஆங்காங்கே கிடந்தது கொடுமை. அண்மையில் அவற்றை கூட நீக்கிவிட்டார்கள்.
கோவையில் வசிக்கலாம் மதுரை சென்று வரலாம்.
இந்த வேற்றுமை எல்லாம் நம் பார்வையில் தான் உள்ளது.
கோவை ஆனாலும் மதுரை ஆனாலும் தமிழ் ஒலிக்கும் பூமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக