சனி, 12 மார்ச், 2022

மகளிர் தினத்தன்று சமையலறை உபகாரணங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக குறுஞ்செய்தி மூலம் பேசுபொருளாகிய பிளிப்கார்ட் நிறுவனத்தின் குறுஞ்செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்?

 இந்த ஆண்டு மார்ச்-8 மகளிர் தினம் அன்று ஃபிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை நோக்கத்தில் மற்றும் ஆர்வக்கோளாறில் செய்த ஒரு தவறினால் பெருத்த எதிர்ப்புகளைச் சந்தித்தது.

இந்த நிறுவனம் செய்த விளம்பரத்தில் பிற்போக்கு கருத்துக்கள் முன்வைக்கப் படுவதாக பல்வேறு தரப்பிலும் எழுந்த குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்தன.

குறிப்பாக இந்த ஆண்டு,2022 ல் சர்வதேச மகளிர் தினத்திற்கான தீம் 'நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்' என்பதாகும்.

“Gender equality today for a sustainable tomorrow.”

பாலின சமன்பாடு என்பது ஏற்கனவே எட்டப்பட்டு விட்டது. எட்டப்பட்டு வருகிறது ஆனால் அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் ,வரும் நாட்களிலும்/ வரும் காலத்திலும் எந்த நிலையிலும் அதில் தொய்வு ஏற்படக்கூடாது; நிரந்தரமான , நிலையான பாலின சமன்பாடு என்பது இனி வரும் காலங்களிலும் வரும் தலைமுறைகளிடம் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதே நோக்கம்.

பாலின சமத்துவம் இன்று மட்டும் என்று இல்லாமல் வரும் காலங்களிலும் தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மகளிர் தினம் என்பது அனுசரிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது . இந்த ஆண்டு அது குறித்த மாநாடுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அப்படி இருக்கையில், துரதிஷ்டவசமாக ஃபிளிப்கார்ட் போன்ற பிரபலமான இணையதள வர்த்தக நிறுவனம் பெண்களை சமையலறையோடு மட்டும் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கான தள்ளுபடி என்று அறிவித்ததைப் பல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாக அதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பி விட்டனர்.

பாலின பாகுபாடு என்று மனம் வருந்தி ஏதோ பெண் என்றாலே சமையலறைக்கு மட்டும்தான் அவள் சொந்தம், சமையலறை மட்டும்தான் அவள் உலகம் என்பது போல எப்படி இதுபோன்ற விளம்பரத்தை கொடுக்கலாம் என்று மக்கள் யாவரும் பொங்கி எழுந்தனர்.

டுவிட்டரில் வைத்துக் கிழித்து விட்டார்கள். பிரபல ஆங்கில தொலைக்காட்சிகளும் வெளிச்சம் போட்டுக் காட்டின.

ஏன் ஆண்கள் கரண்டி பிடிப்பதில்லையா சமையலறையில் அவர்கள் வேலை செய்வது இல்லையா? இது பாலினப்பாகுபாடு இல்லையா? என்றும் பலவிதமான விமர்சனங்களை விவாதங்களைக் கிளப்பிவிட்டது.

செய்த தவறை உணர்ந்து உடனடியாக மண்டியிட்டது ஃபிளிப்கார்ட் வர்த்தக நிறுவனம்.

We are sorry என்று பெரிய அளவில் மன்னிப்புக் கோரினர்.

ஏழாம் தேதி மாலை Flipkart , Flapkart ஆன கதை இதுதான்.

ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்று பார்க்கலாம்.

இந்த நிறுவனமும் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இதுவும் ஒரு வர்த்தக நிறுவனம் தானே.

எல்லா வணிக நிறுவனங்களுமே மார்ச் மாதம் நிதி ஆண்டு முடிவு கிளியரன்ஸ் சேல் போடுவார்கள்.

பழைய ஸ்டாக் எல்லாவற்றையும் அதிகபட்ச தள்ளுபடியுடனாவது விற்று முடித்து விட்டு புதிய நிதி ஆண்டை துவங்குவார்கள் .பண்டிகை காலம் தவிர வருடத்தில் ஒருமுறை இதுபோன்ற தள்ளுபடி அறிவிப்பார்கள்.

தள்ளுபடி என்பது எப்போதாவது அறிவிக்கப்பட்ட காலம் முடிந்து இப்போது எப்போதுமே தள்ளுபடி என்று ஆகிவிட்டது.

காதலர் தினம் அன்னையர் தினம் மகளிர் தினம் இப்படி ஏதோ ஒரு தினத்தில் அவர்கள் ஏதோ ஒரு தள்ளுபடியை அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்

. சுதந்திர தினம் குடியரசு தினம் என்று எதையும் விட்டு வைப்பதில்லை.

ஆன்-லைன் வர்த்தகத்திலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து தள்ளுபடி போட்டுக் கொண்டிருப்பார்கள்.

Flash sale,

lightening sale,

ticktock sale,

crazy sale ,

Deal of the day sale.

Summer sale winter sale autumn sale என்று எதற்கெடுத்தாலும் தள்ளுபடி அறிவித்து போட்டி போட்டுக்கொண்டு வணிகம் நடக்கிறது.

அவ்வளவு ஏன்?

ஒரு விளம்பரத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து பார்த்தால் கூட உங்களுக்கு ஒரு சிறப்பு சலுகை உண்டு.

மக்களை ஈர்ப்பதற்காக அரங்கேற்றப்படும் செயல்பாடுகள்.

குறிப்பாக பொருளாதார நிலையில் மேம்பாட்டை எட்டியுள்ள மகளிரைக் குறிவைத்து விளம்பரங்கள் செய்கிறார்கள். பெண்கள் பாடுபட்டு உழைத்து ஈட்டிய பொருளை செலவழிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம்.

பாலின சமன்பாடு ஆண்களையும் குறிவைத்து பல விளம்பரங்கள் வருகின்றன.

ஒரு சிறிய விளம்பரம் தான் ,ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் புறந்தள்ளப்படக்கூடாது.

ஒரு காட்டையே அழிக்க வல்லது ஒரு நெருப்புப்பொறி என்பதை மறக்கக்கூடாது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விடம் கூட கலக்கக்கூடாது.

விளம்பரம் செய்யட்டும் .

வியாபாரம் செய்யட்டும். ஆனால் பிற்போக்கு கருத்துகளை சிந்தனைகளை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடம் விதைக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் கருத்தாக கவலையாக இருக்கிறது.

எந்த ஒரு சிறு காரணம் கொண்டும் முன்னேறி வரும் சமுதாயம் பின்னடைவு காணக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...